

காபூல்,
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே 18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் களத்தில் இருக்கின்றன. இந்த இருதரப்பு படைகளும் இணைந்து, தலீபான் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த உள்நாட்டு போரை முடிவு கொண்டுவர ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசுகள் தலீபான் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன. பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான் ராணுவமும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் பாரா மாகணத்தில் உள்ள ஹெரத்-காந்தகார் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பயங்கரவாதிகள் சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் அந்த பஸ் உருக்குலைந்து போனது. குண்டுவெடிப்பில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 34 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் அந்த பிராந்தியத்தில் தலீபான்கள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவதாலும், அவர்கள் போலீசாரை குறிவைத்து அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதாலும் இந்த தாக்குதலையும் அவர்களே நடத்தியிருப்பார்கள் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்புகளை விட பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையே அதிகம் என ஐ.நா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மற்றும் சர்வதேச படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் மட்டும் அப்பாவி மக்கள் 717 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும், இது பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களை காட்டிலும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.