ஆப்கானிஸ்தான்: ஓட்டல் குண்டுவெடிப்பில் சீனர் உள்பட 7 பேர் பலி

சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் சாப்பிட கூடிய வகையில் ஓட்டலில் உணவு தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஷார்-இ-நவ் பகுதியில் சீன முஸ்லிம்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கூட்டாக இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சீன முஸ்லிம்களுக்காகவே இந்த ஓட்டல் நடத்தப்பட்டு வந்துள்ளது என கூறப்படுகிறது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாண பகுதியை சேர்ந்தவரான அப்துல் மஜீத் என்ற சீன முஸ்லிம், அவருடைய மனைவியுடன் சேர்ந்து இந்த ஓட்டலை நடத்தி வந்துள்ளார். எனினும், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் சாப்பிட கூடிய வகையில் ஓட்டலில் உணவு தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த ஓட்டலில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அப்போது, ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள், உரிமையாளர் அப்துல் உள்பட பலர் அதில் சிக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் சீனர் ஒருவர் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டினர் 6 பேர் என மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஓட்டலின் சமையல் அறை அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.






