

காபுல்,
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்து, தலிபான்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்தே ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
குடும்பத்தில் உள்ள ஆண் ஒருவரின் துணை இல்லாமல் பெண்கள் தனியாக வெளியே செல்லக் கூடாது, பெண்கள் உயர்கல்வி பயிலக் கூடாது, அரசு ஊடகங்களில் பெண்கள் பணிபுரியக் கூடாது, தனியார் ஊடகங்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் முழு உடலை மறைக்கும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தலிபான் ஆட்சியில் மருத்துவ சேவைகளைப் பெறுவதிலும் பெண்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றனர். ஆண் மருத்துவர்கள் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பெண்கள் மருத்துவ பயிற்சி பெறுவதற்கும் தடை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் மாகாணத்தில் பெண்களின் பெயர்களை அதிகாரப்பூர்வ ஆவணங்கள், பதிவுகள் ஆகியவற்றில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் பிற அரசு துறை அதிகாரிகளுக்கு தலிபான் அரசின் ஒழுக்கநெறி அமைச்சக அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பெண்களின் பெயர்களை எழுதக் கூடாது என்றும், அதற்கு பதிலாக ஆடு, மாடு அல்லது ‘பீபி’(வயது முதிர்ந்த பெண்) உள்ளிட்ட வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவெளியில் பெண்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் என்ற ஒரு மாகாணத்தில் மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் விரைவில் நாடு முழுவதும் இந்த உத்தரவை தலிபான்கள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக மனித உரிமை அமைப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.