

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்தீஷ் தீவிரவாத படையினரின் ஆதிக்கம் நிறைந்த குவாமிஷ்லி நகரில் கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என உடனடியாக தெரியவரவில்லை.
இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். குவாமிஷ்லி நகர் அமைந்த ஹசாகே மாகாணம் உள்பட வடகிழக்கு சிரிய பகுதிகளை குர்தீஷ் தீவிரவாத படையினர் தங்களது கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்நகரை இலக்காக கொண்டு கடைசியாக கடந்த செப்டம்பரில் தாக்குதல் நடந்தது. அதில், மோட்டார் சைக்கிள் ஒன்றை வெடிக்க செய்ததில் ஒரு குழந்தை பலியானது. பலர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.
சிரியாவின் ஆப்ரின் பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்துப் போராளிகள் மீது துருக்கி தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்நிலையில் துருக்கியின் தாக்குதலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக குர்துப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் எல்லையை ஒட்டி இருக்கிறது ஆஃப்ரின். இப்பகுதியில் தற்போது சிரியாவின் அரசுப் படைகள் ஏதுமில்லை. தற்போது போராளிகளும், அரசும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தால் துருக்கியை எதிர்கொள்ள ஆஃப்ரின் பகுதிக்கு சிரியாவின் அரசுப் படைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாள்களில் அரசுப் படையினர் ஆப்ரின் பகுதிக்குள் வருவர் என்றும், எல்லைப் பகுதியை ஒட்டி சில நிலைகளை அவர்கள் அமைப்பார்கள் என்றும் குர்துப் படை அதிகாரி பார்தன் ஜியா குர்த் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.