

புதுடெல்லி
சமீபத்தில் கசகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நிகழ்ந்த ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சீன அதிபர் ஸீ ஜின்பிங் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பை சந்திக்கவில்லை. இவ்வாறு பாராமுகத்தை சீனா காட்டியதற்கு அந்நாட்டவர் இருவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கொல்லப்பட்டதே காரணம். இக்கொலைக்கு ஐஎஸ் இயக்கம் பின்னர் பொறுப்பேற்றது. இருப்பினும் சீனா அமைத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டத்தில்தான் கொல்லப்பட்ட இருவர் பணிபுரிந்து வந்தனர். பலுசிஸ்தான் மாகாணம் எத்தனை சீனர்கள் அங்கு பணிபுரிகிறார்கள் என்ற கணக்கெடுப்பையும் நடத்த உத்தரவிட்டுள்ளது.
சீனாவோ, கொலையானது இத்திட்டம் தொடர்பானதல்ல என்று கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட மாகாணத்தின் அரசு 4.200 வலுவுடைய படையை வெளிநாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கென ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. அந்நாடு 15,000 பேர் கொண்ட படையை இத்திட்டத்திற்கென கொடுத்துள்ளது. இப்படைக்கு நவீன கருவிகளையும், வாகனங்களையும் வழங்கியுள்ளதாகவும் மாகாணத்தின் உள்துறை செயலர் கூறினார். தங்கள் மாகாணத்தில் பணிபுரியும் 4,000 சீனர்களுக்கு 2,600 பேர் கொண்ட காவல்படையை பாதுகாப்பிற்காக சிந்து மாகாணம் ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.