

ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பது ஒரு காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் கூறும் போது, ‘பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஈரான் வராவிட்டாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா தனது சர்வாதிகார போக்கை கைவிட்டால் மட்டுமே உடன்பாட்டுக்கான வழி கண்டறியப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட்டு, ஈரான் நாட்டு உரிமைகளை மதிக்கும் என்றால் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான வழிகள் நிச்சயமாக கண்டறியப்படும். பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர்களையும், குறிப்பாக எனது அன்பு சகோதரர் டாக்டர் காலிப் பாப்பையும் நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும் போது, ‘போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாங்கள் அமெரிக்காவுடன் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா சீர்குலைத்து விட்டது. எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்களை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்தது’ என்றார்.