

திரிபோலி,
லிபியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அந்த புரட்சியை ராணுவத்தைக் கொண்டு கடாபி அடக்கினார். இருப்பினும் 2011-ம் ஆண்டு கடாபி அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். பின்னர் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு காட் பகுதியில் உள்ள அவீனாட் நகரத்தில் அடையாளம் தெரியாத போர் விமானம் ஒன்று வான்தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 கார்கள் எரிந்து நாசமாயின. உடனடியாக சம்பவ இடத்துக்கு ராணுவம் விரைந்தது.
கொல்லப்பட்டவர்கள் அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் என தகவல்கள் கூறுகின்றன. நடந்த வான் தாக்குதலுக்கு லிபியா விமானப்படை பொறுப்பு அல்ல என தெரிய வந்துள்ளது.
இந்த வான்தாக்குதலை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில் அமெரிக்க ராணுவம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.