டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு சவூதி அரேபியா வழியாக ஏர் இந்தியா விமான சேவை துவக்கம்

டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு சவூதி அரேபியா வழியாக ஏர் இந்தியா விமான சேவை நேற்று (வியாழக்கிழமை) முதல் துவங்கப்பட்டுள்ளது. #AirIndia
டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு சவூதி அரேபியா வழியாக ஏர் இந்தியா விமான சேவை துவக்கம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு விரைவில் நேரடி விமானச் சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்தது. 256 இருக்கைகளைக் கொண்ட போயிங் 787-800 ரக விமானங்களை இந்தச் சேவைக்கு ஏர் இந்தியா விமானம் பயன்படுத்த திட்டமிட்டது. இரு நகரங்களுக்கு இடையேயான நேரடி விமானச்சேவை நேற்று முதல் துவங்கப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த விமானசேவை நடைபெறுகிறது.

ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லை வழியாக இஸ்ரேல் செல்ல சவூதி அரேபியா அனுமதி அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததைத் தொடர்ந்து, டெல்-அவிவ் நகருக்கு நேரடி விமானம் இயக்க ஏர் இந்தியா முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. சவூதி அரேபிய வான் எல்லை வழியாக விமானம் செல்வதன் மூலம் பயண நேரம் ஏறக்குறைய 2 மணி நேரம் வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன், சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக இஸ்ரேல் செல்வதற்கு ஏர் இந்தியா விமானங்கள் 7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது, சவூதி அரேபியா வழியாக செல்வதன் மூலம், ஐந்தரை மணி நேரத்தில் டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்றடையலாம் என தெரிகிறது.

இந்த சேவையானது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்பட உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இந்த சேவை துவங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரேல் சுற்றுலா துறை மந்திரி யாரிவ் லெனின் கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க பயணம் தொடங்கி உள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அத்துடன் இருதரப்பு உறவும் மேம்படும் என்றார்.

இஸ்ரேல் செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சவூதி அரேபியா தங்கள் வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது போல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் விரைவில் சவூதி அரேபியா அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com