ஏர் இந்தியா விமான விபத்து - போயிங் நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு

விமான விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினர் அமெரிக்காவின் டெலாவேர் மாகாண கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏர் இந்தியா விமான விபத்து - போயிங் நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு
Published on

வாஷிங்டன்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், எரிபொருள் ஸ்விட்ச் கோளாறால் விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த எரிபொருள் ஸ்விட்சை ஹனிவெல் என்ற நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் குடும்பத்தினர் அமெரிக்காவின் டெலாவேர் மாகாண கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதன்படி விமான விபத்தில் உயிரிழந்த காந்தாபென் பகதல், நாவ்யா பகதல், குபேர்பாய் பட்டேல் மற்றும் பாபிபென் பட்டேல் ஆகியோரின் குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹனிவெல் நிறுவனம் தயாரித்த எரிபொருள் சுவிட்சுகளுக்கு அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம்(எப்.ஏ.ஏ.) சோதனை செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விபத்து குறித்து எப்.ஏ.ஏ. நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், எரிபொருள் சுவிட்ச் கோளாறால் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com