

பெர்த்,
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் நேற்று முன்தினம் இரவு இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு புறப்பட்டது. அதில் 151 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட 25 நிமிடங்களில் சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், திடீரென 20 ஆயிரம் அடி சறுக்கி 10 ஆயிரம் அடிக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ஆக்ஸிஜன் மாஸ்க்கை அணிந்தனர். இதை அறிந்த விமான நிலைய கட்டுப்பாட்டுத் துறை, மீண்டும் பெர்த் விமான நிலையத்துக்கு திரும்புமாறு விமானிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தின்போது, விமானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியானது. தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று தெரிவித்துள்ள ஏர் ஏசியா நிறுவனம், பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.