விமானங்களில் 'அடல்ட் ஒன்லி' பகுதி.. கோரண்டன் ஏர்லைன்ஸ் புதிய திட்டம்

விமானங்களில் வயது வந்தோர் மட்டும் பயணம் செய்யக்கூடிய வகையில் ஒரு பகுதியை கோரண்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஒதுக்க உள்ளது.
விமானங்களில் 'அடல்ட் ஒன்லி' பகுதி.. கோரண்டன் ஏர்லைன்ஸ் புதிய திட்டம்
Published on

விமானங்களில் பயணம் செய்யும்போது சிலர் குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். குழந்தைகள் அழுகை சத்தமும் அவ்வப்போது கேட்கும். இதுபோன்ற சூழல், அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இடையூறாக இருக்கும். சில சமயங்களில் இது தொடர்பாக வாக்குவாதமும் ஏற்படுகிறது.

எனவே, குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க விமானங்களில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்ற பகுதியை கோரண்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வழங்குகிறது.

குழந்தைகளின் சத்தம் இல்லாத சூழலை விரும்பும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகளுக்கு தனியாக இருக்கைகளை ஒதுக்க கோரண்டன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஏர்பஸ் ஏ350 விமானங்களில் சில இருக்கைகள் வயது வந்தோருக்காக ஒதுக்கப்படும். ஆம்ஸ்டர்டாம் மற்றும் டச்சு கரீபியன் தீவான குராக்கோ இடையே இயக்கப்படும் விமானத்தில் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

விமானத்தில் உள்ள இந்த பகுதியானது, குழந்தைகள் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்காகவும், அமைதியான சூழலில் தங்கள் பணிகளை கவனிக்க விரும்பும் பயணிகளுக்காகவும் ஒதுக்கப்படுவதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

விமானத்தின் முன் பகுதியில் இந்த இருக்கைகள் ஒதுக்கப்படும். 94 சதாரண இருக்கைகள் மற்றும் 9 பெரிய வசதியான இருக்கைகள் இந்த பகுதியில் இருக்கும். இந்த பகுதிக்கும், மற்ற இருக்கைகள் உள்ள பகுதிக்கும் இடையே சுவர்கள் மற்றும் திரைச்சீலைகள் அமைக்கப்படும். அடல்ட் ஒன்லி இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 45 யூரோக்கள் (ரூ.4,050) செலுத்த வேண்டும். அதிலும் பெரிய இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 100 யூரோக்கள் (ரூ.8,926) செலுத்த வேண்டும் என விமான நிறுவனம் கூறியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com