நடுவானில் உடைந்த விமான ஜன்னல்; அருகில் இருந்தவர் வெளியே இழுக்கப்பட்டதால் பரபரப்பு

காற்றின் வேகத்தால் ஜன்னல் ஓரம் இருந்தவரின் தலை மற்றும் தோள்பட்டை வெளியே இழுக்கப்பட்டது.
நடுவானில் உடைந்த விமான ஜன்னல்; அருகில் இருந்தவர் வெளியே இழுக்கப்பட்டதால் பரபரப்பு
Published on

ஏதென்ஸ்,

செர்பியா நாட்டை சேர்ந்த 61 வயது சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவியுடன் கிரீஸ் நாட்டின் தெசலோனிக்கி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமின்ஜென் நகருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். பக்கத்து இருக்கையில் அவரது மனைவி இருந்தார்.

அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு வெடிப்பு நிகழ்ந்தது போன்ற சத்தம் கேட்டு அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். அந்த சுற்றுலா பயணியின் அருகே இருந்த ஜன்னல் உடைந்ததால் அவ்வாறு சத்தம் ஏற்பட்டது தெரியவந்தது. விமானத்தில் ஜன்னல் உடைந்துவிட்டால், விமான கேபினுக்குள் இருக்கும் அழுத்தம் குறைந்து மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இத்தகைய சூழலில் ஆக்சிஜன் கவசங்கள் ஒவ்வொரு பயணியின் இருக்கை மேலும் தொங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், ஜன்னல் உடைந்ததால் அனைத்து ஆக்சிஜன் கவசங்களும் பயணிகளின் இருக்கைகளுக்கு மேலிருந்து விழத் தொடங்கின. அதே சமயம், ஜன்னல் ஓரம் இருந்தவரின் தலை மற்றும் தோள்பட்டை, காற்றின் வேகத்தால் வெளியே இழுக்கப்பட்டது. இதைக் கண்டு பதறிப்போன அவரது மனைவி, தனது கணவரைப் பிடித்து உள்ளே இழுக்க முயன்றார். அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், நல்வாய்ப்பாக அவரது முழு உடலும் வெளியே இழுக்கப்படாமல் தப்பினார்.

இந்த சம்பவத்தால் விமானத்திற்குள் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அந்த விமானம் மீண்டும் தெசலோனிக்கி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 61 வயது சுற்றுலா பயணிக்கு முகம் மற்றும் கழுத்து பகுதியில் லேசான காயங்கள் ஏற்பட்டன. விமான இன்ஜினில் இருந்து பிரிந்து விழுந்த பாகம் ஒன்று ஜன்னல் மீது மோதியதால், அந்த ஜன்னல் உடைந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com