ஏமனில் அமெரிக்க வான்தாக்குதலில் அல்-கொய்தா தளபதி பலி: போர்க்கப்பலை தகர்த்த சம்பவத்தில் தேடப்பட்டவர்

ஏமனில், அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத தளபதி பலியானார்.
ஏமனில் அமெரிக்க வான்தாக்குதலில் அல்-கொய்தா தளபதி பலி: போர்க்கப்பலை தகர்த்த சம்பவத்தில் தேடப்பட்டவர்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க கடற்படையை சேர்ந்த யுஎஸ்எஸ் கோல் என்கிற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி ஏமன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு சென்றது. அதன்படி அங்கு கப்பலில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து கொண்டிருந்தது.

அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 2 பேர் வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகை ஓட்டிவந்து யுஎஸ்எஸ் கோல் கப்பலின் மீது மோதினர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

இதில் கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் குண்டுவெடிப்பில் சிக்கி கப்பலில் இருந்த கடற் படைவீரர்கள் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 39 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த அல்-கொய்தா பயங்கரவாத தளபதியான ஜமால் அல்-படாவி என்பவர் மூளையாக செயல்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்கா போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின. இது குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது அந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏமனின் மரிப் மாகாணத்தில் உள்ள அல்-கொய்தா பயங்கரவாதிகளின் நிலைகள் மீது கடந்த 1-ந்தேதி அமெரிக்க போர் விமானங்கள் துல்லிய வான்தாக்குதல் நடத்தியது. இதில் யுஎஸ்எஸ் கோல் போர்க்கப்பல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த அல்-கொய்தா பயங்கரவாத தளபதி ஜமால் அல்- படாவி கொல்லப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டரில் கூறுகையில், யுஎஸ்எஸ் கோல் போர்க்கப்பல் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த நமது கதாநாயகர்களுக்கு நம்முடைய சிறப்பான ராணுவம் நீதியை வழங்கிவிட்டது. நமது வீரர்களை கொன்ற பயங்கரவாதி ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டுவிட்டார். அல்-கொய்தாவுக்கு எதிரான நம்முடைய போர் தொடரும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com