அல்ஜீரியா: ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 18 பயணிகள் பலி

அல்ஜீரியாவின் ஜனாதிபதி தெபவுன் விபத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.
அல்ஜீர்ஸ்,
அல்ஜீரியா நாட்டின் கிழக்கே அமைந்த அல்ஜீர்ஸ் நகரில் முகமதியா மாவட்டத்தில் பஸ் ஒன்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த பஸ் திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 18 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார், அவசரகால பணியாளர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அப்தில் மத்ஜித் தெபவுன் இரங்கல் தெரிவித்து கொண்டதுடன் நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்து உள்ளார். இதன்படி, அரசு அலுவலக கட்டிடங்களில் அந்நாட்டின் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.
அல்ஜீரியாவில் சமீப ஆண்டுகளில், தரமற்ற சாலைகள், விரைவாக செல்லுதல் அல்லது இயந்திர கோளாறுகள் ஆகியவற்றால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், இந்த கொடிய விபத்து நடந்துள்ளது.






