‘அமீரகத்தில் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் பாதுகாப்பானது’; சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

அமீரகத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை தான் என அதிகாரி தெரிவித்தார்.
‘அமீரகத்தில் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் பாதுகாப்பானது’; சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
Published on

இது குறித்து சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசானி நிருபர்களிடம் கூறியதாவது:-

அமீரகத்தில் உள்ள மருத்துவ அதிகாரிகள் தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது என கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் காரணமில்லாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்ற செயலாகும். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு அனைவரும் முன் வரவேண்டும். ஒரு சிலர் கொரோனா ஊசியால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமா? என்ற அச்சத்தில் அதனை போட்டுக்கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். அவ்வாறு தயங்குபவர்கள் தங்களை மட்டுமல்லாமல் தங்களை சுற்றியுள்ளவர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மருத்துவ ஆய்வுகள் தடுப்பூசிகளே தொற்று நோயால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு அளிக்க கூடியதாக இருக்கமுடியும் என்பதை வலியுறுத்துகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அமீரகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலர் தயக்கத்தினால் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருப்பது அனைவருக்கும் விரைந்து சுகாதார பாதுகாப்பு அளிப்பதில் முற்றுக்கட்டையாக உள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் வீட்டில் உள்ள வயதான அல்லது இதய நோயுடைய உறவினர்களை இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பின் நாட்களில் வருத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. அமீரகத்தில் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவையே. எனவே சமூகத்தில் பரவும் தொற்றை ஒழிப்பதற்கு அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com