ஈரானுக்கு பதிலடி தர எல்லாம் தயாராக உள்ளது: இஸ்ரேல் மிரட்டல்

இஸ்ரேல் தாக்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. போருக்கு தயாராக இருக்கும்படி படைகளுக்கு உத்தரவிட்டும் உள்ளது.
ஈரானுக்கு பதிலடி தர எல்லாம் தயாராக உள்ளது: இஸ்ரேல் மிரட்டல்
Published on

டெல் அவிவ்,

இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் திரளாக வந்திருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென புகுந்த ஹமாஸ் அமைப்பு, ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியது.

இதில், இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பு, அவர்களில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

இந்த மோதல் நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது. இதில், 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதேபோன்று, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானும் சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அவற்றில் பல ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து, அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியது. ஆபரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார். ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலன்ட் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, ஈரான் நாட்டுக்கு பதிலடி தருவதற்கான அனைத்து விசயங்களும் தயாராக உள்ளன. இந்த பதிலடிக்கு அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. எனினும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை இலக்காக கொண்டு இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்கி வருகிறது.

ஈரான் நாடும், இஸ்ரேல் தாக்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. போருக்கு தயாராக இருக்கும்படி படைகளுக்கு உத்தரவிட்டும் உள்ளது. இந்த சூழலில், ஈரான் நாட்டின் குத்சு படைகளின் தலைவர் இஸ்மாயில் குவானி காணாமல் போயுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மரணம் அடைந்து இருக்கலாம். அல்லது காயமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஈரான் தலைவர் கடந்த வெள்ளி கிழமை நடத்திய இறை வணக்க நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை. அதன் பின்னர் அவரை காணவில்லை. லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பகுதிகளை பார்வையிட சென்ற பின்பே அவர் காணாமல் போயிருக்கிறார்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள தஹியே என்ற இடத்திற்கு சென்ற குவானியை, ஈரான் அரசோ அல்லது ஹிஸ்புல்லா அமைப்போ தொடர்பு கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com