61 வயதில் காதலியை கரம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது காதலி லாரனை கரம்பிடித்தார்.
61 வயதில் காதலியை கரம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
Published on

ரோம்,

இத்தாலியின் வெனிஸ் நகரில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது காதலி லாரனை கரம்பிடித்தார். அதேசமயம் திருமணத்தால் நகரம் மாசுபடுவதாக கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

உலக பெரும்பணக்காரரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ் 2020-ம் ஆண்டு தனது மனைவி மெக்கன்சி ஸ்காட்டை விவாகரத்து செய்தார். 61 வயதான ஜெப் பெசோஸ் அதன் பிறகு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான லாரன் சான்செசை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களை சுற்றினர்.

இந்தநிலையில் ஜெப் பெசோஸ் தனது காதலி லாரனை திருமணம் செய்ய முடிவு செய்தார். இத்தாலியில் உள்ள உலகின் பிரசித்திபெற்ற சுற்றுலாதலமான வெனிஸ் நகரில் அவர்களது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக வெனிஸ் நகரில் உள்ள சான் ஜியோர்ஜியோ மாகியோர் தீவையே கிட்டத்தட்ட விலைக்கு வாங்கினார். அதாவது அங்குள்ள தங்கும் விடுதிகள், கார்கள், படகு அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டன. இதற்கான மொத்த செலவு சுமார் ரூ.100 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

அதன்படி திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் உலக பணக்காரரான பில்கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் வெனிஸ் நகரமே களைகட்டியது. இந்த திருமணத்தால் சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதேசமயம் மிதமிஞ்சிய சுற்றுலா பயணிகளால் நகரின் சுற்றுச்சூழல் மாசுபடும் என உள்ளூரில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. அவரது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்துக்கு மத்தியில் மார்கஸ் சதுக்கம் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் அவர்களது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com