

அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய ஆட்குறைப்பு நடவடிக்கை, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களைப் பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உலகளவில் சுமார் 1,000 ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் ஊழியர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய ஆட்குறைப்பு நடவடிக்கை, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களைப் பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர் சேவை, விற்பனையாளர்களுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் உள்நாட்டு தகவல் பரிமாற்ற தளமான ஸ்லாக்கில் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு வேலை பறிபோனதாக பதிவிட்டுள்ளனர். இருப்பினும், இந்தியாவில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை அமேசான் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் ஸ்டோர்ஸ் பிரிவில் சில பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை விரைவாக வழங்குவதற்கும், நிறுவனத்தின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப பணிக்குழுக்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்டோர்ஸ் பிரிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சில பணியிடங்களை நீக்கும் கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அடுத்தகட்டமாக வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.அமேசானின் ஸ்டோர்ஸ் பிரிவு, நிறுவனத்தின் முக்கியமான இ-காமர்ஸ் இணையதளத்தை நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அமேசான் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்டங்களாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம், உலகளவில் 18,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிறுவனம் நீக்கியது.கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்ததால், நிறுவனத்தில் தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார். இதுவே பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே வேலை பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.