

ஜகார்தா,
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவு அருகே ஜாவா கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த நீர்மூழ்கி கப்பலில் இந்தோனேசிய கடற்படையினர், மாலுமிகள் உள்பட மொத்தம் 53 பேர் பயணித்தனர்.
இந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த 21 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பாலி தீவு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 95 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
இதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட கடற்படையினர் நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தோனேசியா உதவி கோரியதையடுத்து, மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிக்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீர்மூழ்கி கப்பலை மீட்கும் முயற்சியில் அமெரிக்காவும் கைகோர்த்துள்ளது. கப்பலை தேடும் பணிக்காக இந்தோனேசிய அரசின் கோரிக்கையை ஏற்று விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்ட வான்வெளி தளவாடங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.