கிம் ஜாங் அன் உடல் நிலையை அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்கிறது - மைக் பாம்பியோ சொல்கிறார்

கிம் ஜாங் அன் உடல் நிலையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் அன் உடல் நிலையை அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்கிறது - மைக் பாம்பியோ சொல்கிறார்
Published on

வாஷிங்டன்,

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந்தேதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வரவில்லை. இது அவரின் உடல்நிலை மோசமாக உள்ளது என யூகங்கள் பரவ வித்திட்டது. இதற்கிடையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, கிம் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் கிம் நலமாக இருப்பதாகவும் அண்டை நாடான தென்கொரியா கூறிவருகிறது. இதனிடையே கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க வொன்சன் நகர் கடற்கரையில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் கிம் தங்கியிருக்கலாம் என்றும் செய்திகள் வலம் வருகின்றன.இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகள் வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சமீபத்தில் பார்க்கவில்லை என்றும், அவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது இதுபற்றி அவர் கூறுகையில், நாங்கள் அவரை (கிம்) பார்க்கவில்லை. அவரது உடல் நிலை குறித்து பரவும் செய்திகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ எங்களிடம் எந்த தகவலும் இல்லை. நாங்கள் அதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என கூறினார். மேலும் வட கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் அல்லது பஞ்சம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று மோசமாக பரவ வாய்ப்பு உள்ளதாகவும் மைக் பாம்பியோ கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com