ஈரானில் புதுவித தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா... தாக்கிய பகுதியில் இருந்து 50 மீ தொலைவில் மக்களை கொன்ற ஏவுகணை

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் வகை ஏவுகணையானது புதுவித தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.
அமெரிக்கா
Published on

நியூயார்க்

ஈரானில் முதன்முறையாக அமெரிக்கா புதுவித தாக்குதலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென வான்வழியாக தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது.

இதனால் மேற்காசிய பகுதியில் கடந்த 6 மாதங்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், மோதலின்போது, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் புதிய வகை ஏவுகணை தாக்குதலை முதன்முறையாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

புதுவித தாக்குதல்

இந்த ஏவுகணையானது, நீண்ட தொலைவு இலக்கை, துல்லியத்துடன் தாக்கும் தன்மை கொண்டது. பொதுவாக ஏவுகணை என்றால், இந்த வகையையே சார்ந்திருக்கும். அது தாக்கும் பகுதியில் உள்ள இடங்கள், கட்டிடங்களை சேதப்படுத்தும். அந்த பகுதியிலுள்ள மக்களையும் படுகொலை செய்யும்.

ஆனால், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் வகை ஏவுகணையானது புதுவித தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. பிற ஏவுகணைகளை விட வேறுபட்ட தன்மை கொண்டது. இந்த ஏவுகணை தாக்குதலின்போது பரவலாக வெடிகுண்டு சிதறல்களை ஏற்படுத்தும். அது கோடிக்கணக்கான துண்டுகளாக உடைந்து, பரவி பாதிப்பு ஏற்படுத்தும்.

3 ஏவுகணைகள்

இதனால், ஏவுகணை தாக்கிய பகுதியில் இருந்து 50 மீ தொலைவில் உள்ள மக்களும் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்த வகை ஏவுகணையை ஈரான் மீது அமெரிக்கா முதன்முறையாக செலுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது என்று ஏர்வார்ஸ் என்ற அமைப்பும் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களும் தெரிவித்து உள்ளனர்.

இதன்படி, ஈரானின் லாமெர்ட் நகர் மீது 3 ஏவுகணைகள் தாக்கின. அது வெடித்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரையிலான பகுதிகளில் வசித்த மக்கள் உயிரிழந்து உள்ளனர். அதனுடன், 3 மடங்கு தொலைவிலான பகுதிகளிலும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின்போது, 7 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியானார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com