உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக அமெரிக்கா இருந்து வருகிறது
வாஷிங்டன்,
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
இது ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. மேலும், இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு என்று அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். அமெரிக்கா பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை, இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழக்கறிஞர்கள் அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் காணவில்லை என்று வாஷிங்டன் (அமெரிக்கா) கூறியுள்ளது.






