நவால்னியை விடுதலை செய்ய வேண்டும் - புதினிடம் கோரிக்கை விடுத்த ஜெர்மனி அதிபர்

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி பணமோசடி வழக்கில் 2 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுள்ளார்.
நவால்னியை விடுதலை செய்ய வேண்டும் - புதினிடம் கோரிக்கை விடுத்த ஜெர்மனி அதிபர்
Published on

மாஸ்கோ,

கொடிய விஷத்தாக்குதலுக்கு உள்ளான ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி பணமோசடி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நவால்னி மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்ததால் அலெக்சி நவால்னி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு அவருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இந்த கருத்தை தெரிவித்து வரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நவால்னியை ரஷிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அரசுமுறை பயணமாக ரஷியா சென்றுள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கல் நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நவால்னியை விடுதலை செய்ய வேண்டும் என நான் ரஷிய தலைவரிடம் (புதின்) கூறினேன் என்றார்.

அதற்கு பதிலளித்த விளாடிமிர் புதின், அவர் (நவால்னி) குற்றவியல் குற்றத்திற்காக சிறையில் உள்ளார். ரஷிய நீதிமன்றத்தின் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த சம்பவத்தால் இரு நாட்டு தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com