வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை

வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் நேற்று ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
டாக்கா,
அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. போலீஸ்காரர்கள் களம் இறக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 1,581 பேர் உயிரிழந்தனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், நாட்டின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். ஷேக் ஹசீனா மீது அந்த நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
இதனிடையே வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மாணவர்கள் வன்முறை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஷெரீப் உஸ்மான் ஹாடி இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். மேலும் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் கலந்து கொள்வதாகவும் அறிவித்து வந்தார். இதனிடையே உஸ்மான் ஹாடி கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரை தொடர்ந்து அவருடைய நண்பரும் சுடப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்து வாலிபர் திபு சந்திரதாஸ் எரித்து கொல்லப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. பஜார் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே சாலையில் ஏராளமானவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி கூடியிருந்தநிலையில் மர்மநபர்கள் அங்கு நாட்டு வெடிகுண்டு ஒன்றை மக்கள் கூட்டத்தில் தூக்கிவீசிவிட்டு தப்பினர். பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குண்டுவெடிப்பில் சிக்கி சியாம் என்ற வாலிபர் உடல் சிதறி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த சம்பவங்களால் வங்காளதேசத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட போது உள்ளூர் மக்கள் பிடித்து தாக்கியதில் பலியானதாக சொல்லப்படும் நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






