எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்; பிரதமருக்கு கட்டளையிட்ட சபாநாயகர்

நேபாள பிரதமராகப் பாடகர் மற்றும் அரசியல்வாதியான பாலேந்திர ஷா பதவியேற்றது முதலே, நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
எதிர் கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க பிரதமருக்கு உத்தரவு.
நேபாள சபாநாயகர் டோல் பிரசாத் ஆர்யாட்- பிரதமர் பாலேந்திர ஷா
Published on

காத்மாண்டு,

நாடாளுமன்ற கூட்டத்தொடரைத் தொடர்ந்து புறக்கணித்து வந்த நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, கட்டாயமாக அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அந்நாட்டு சபாநாயகர் டோல் பிரசாத் ஆர்யாட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சபாநாயகரின் இந்த அதிகாரப்பூர்வ உத்தரவு, நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற முடக்கம்

நேபாள பிரதமராகப் பாடகர் மற்றும் அரசியல்வாதியான பாலேந்திர ஷா பதவியேற்றது முதலே, நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார். குறிப்பாக, மே 31-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில், உரிய விதிகளைப் பின்பற்றாமல் திடீரென உரையாற்றிய அவர், இந்திய-நேபாள எல்லைப் பகுதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டார்.

"இந்தியா மட்டுமல்ல, நேபாளமும் பல இடங்களில் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது" என்று அவர் ஆதாரங்களின்றிப் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பிரதமரின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு விளக்கம் கோரியும், அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வராமல் தலைமறைவாக இருப்பதைக் கண்டித்தும், எதிர்க்கட்சிகள் கடந்த 77 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

சபாநாயகரின் அதிரடி உத்தரவு

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் சபை கூட்டத்தில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த சபாநாயகர் டோல் பிரசாத் ஆர்யாட், நாடாளுமன்ற விதிகளைச் சுட்டிக்காட்டி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார். நாடாளுமன்ற விதிமுறைகளின்படி (56 to 60), பிரதமர் அவைக்கு வந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது கடமையாகும்.

இதன் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி பிரதமர் பாலேந்திர ஷா கட்டாயமாக நாடாளுமன்றத்தில் ஆஜராகி, எல்லை விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

முடிவுக்கு வந்த 77 நாள் போராட்டம்

நாடாளுமன்றத்தில் பிரதமரின் அதிகாரப் போக்குக்குக் கடிவாளம் போடும் வகையில் சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை முடக்கி வந்த எதிர்க்கட்சிகள் தங்களது 77 நாள் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டன.

இதனால் அவையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.ஆகஸ்ட் 26 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளைக் கணைகளாகத் தொடுக்கத் தயாராகி வருவதால், நேபாள அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com