

வாஷிங்டன்,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் தனது முதல் வேலையாக, ஒட்டுமொத்த நாட்டையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்காக கொரோனா டாஸ்க் போர்ஸ் என்ற பணிக்குழுவை அமைத்துள்ளார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த குழுவின் இணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக்மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் என்ற உயர் பதவி வகித்து வந்தார். டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் விவேக் மூர்த்தி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
முன்னதாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் ஜோ பைடனின் முக்கிய ஆலோசகராக விவேக் மூர்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது புதிய குழு குறித்து ஜோ பைடன் கூறுகையில், இந்த புதிய குழு தொற்று நோய்களின் எழுச்சியை நிர்வகிப்பதற்கான எனது அணுகுமுறையை வடிவமைக்க உதவும். அத்துடன் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை பயனுள்ளவை மற்றும் சமமாக, இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் ஆபத்தில் உள்ள மக்களை பாதுகாத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளும் என்றார்.