வளைகுடா சிக்கல் முற்றுகிறது; துருக்கி படைகளை அனுப்ப முடிவு?

கத்தார் மீது தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லி வரும் அரபு நாடுகள் புதிய சான்றுகளை வெளியிட்டுள்ளன.இந்நிலையில் துருக்கி கத்தாருக்கு ஆதரவாக படைகளை அனுப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா சிக்கல் முற்றுகிறது; துருக்கி படைகளை அனுப்ப முடிவு?
Published on

துபாய்/தோஹா

சவூதி, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் 59 நபர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக சில ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியுள்ளன. இதில் 18 கத்தார் நாட்டவரும் அடங்குவர். குறிப்பாக முன்னாள் கத்தார் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான அப்துல்லா அல்-தானியும் இடம் பெற்றுள்ளார், வெளியிடப்பட்ட ஆதாரங்களில் கத்தாரை தங்களது முகாமாக மாற்றிக்கொண்ட எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹூட் இயக்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் அடங்குவர். கத்தார் எகிப்தில் உள்நாட்டு அரசியல் குழப்ப ங்களுடன் தொடர்பு கொண்ட முஸ்லிம் பிரதர்ஹூட் இயக்கத்தை கடந்த காலங்களில் ஆதரித்துள்ளது.

இச்சிக்கல் இரு தரப்பிற்கும் பொதுவாக இருக்கும் அமெரிக்காவிற்கு இந்த நிலை வெளியுறவுக் கொள்கைச் சவாலாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா கத்தாரில்தான் தனது மிகப்பெரிய படைத்தளத்தைக் கொண்டுள்ளது. இதனிடையே ஜெர்மனி பிரச்சினையை அமைதியாக தீர்த்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு முன் வான், கடல் தடைகளை நீக்கவும் கோரியுள்ளது.

வளைகுடா பிரதேசத்தில் சிறிய ஆனால் பணக்கார நாடான கத்தாருக்கு ஆதரவாக துருக்கி களமிறங்க தயாராகிறது. அடுத்த இரு மாதங்களில் 250 வீரர்கள், கப்பல், விமான படைகளை கத்தாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்ப நாடாளுமன்றத்தின் அனுமதியையும் அதி விரைவாக துருக்கி அதிபர் பெற்றுள்ளார். தற்போது கத்தார் தளத்தில் 90 வீரர்கள் உள்ளனர்.

துருக்கி அதிபர் எர்டோகன் முஸ்லிம் பிரதர்ஹூட்டை ஆதரித்து வெளிப்படையாக பேசி வந்தவராவார். கத்தார் 2022 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தவுள்ளது. ஆனால் கத்தாரின் குடிமக்கள் தொகை 3,00,000 ஆகும். அங்கு தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை 27 இலட்சமாகும்.

இறுதியாக இச்சிக்கலை தீர்ப்பதற்கு கத்தார் அதிகம் நம்புவது அமெரிக்காவைதான். அதிபர் டிரம்ப் சிக்கலைத் தீர்க்க தன்னை ஈடுபடுத்திக்கொள்வார் எனவே சமரசம் எட்டப்படும் என்று அமெரிக்காவிற்கான கத்தார் தூதர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com