ஊழல் வழக்கில் அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டு சிறை

கிறிஸ்டினா பெர்னாண்டஸ் பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
ஊழல் வழக்கில் அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டு சிறை
Published on

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினாவின் துணை அதிபராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார்.

அதிபராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பொதுப்பணிக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும் கிறிஸ்டினா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கிறிஸ்டினாவை குற்றவாளியாக அறிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் கிறிஸ்டினா பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கிறிஸ்டினா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அர்ஜென்டினாவில் துணை ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருக்கும் போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com