சூடானில் ஆயுதக்குழுவினர் தாக்குதல் - 27 பேர் பலி

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான்.
சூடானில் ஆயுதக்குழுவினர் தாக்குதல் - 27 பேர் பலி
Published on

கார்டூமின்,

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

மோதல்

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. அதேபோல், ஆயுதக்குழுக்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

27 பேர் பலி

இந்நிலையில், சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணம் குவார்டாட், அபு ஹமாமா ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். துணை ராணுவத்தின் ஆதரவு பெற்ற சூடான் மக்கள் விடுதலை இயக்கம் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com