மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு; 18 பேர் பலி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் கடந்த 4 வாரங்களாக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு; 18 பேர் பலி
Published on

நேபிடாவ்,

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் கடந்த 4 வாரங்களாக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.

இந்த சூழலில் நேற்று முன்தினம் மக்களின் போராட்டத்தை முறியடிப்பதற்காக முக்கிய நகரங்களில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

ஆனால் அதையும் மீறி யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது போராட்டக்காரர்களை விரட்டியடிக்க ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளாலும் சுட்டதால் பெரும் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின் போது ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த துப்பாக்கி சூட்டில் பலியான என்ஜினீயர் ஒருவர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு, ஐ.நா. நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனை சடலங்கள் வேண்டும் என தனது பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com