50 ரஷிய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்..!

உக்ரைன் போருக்கு மத்தியில், 50 ரஷிய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நியூயார்க்,

உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்த நாள் முதலே எந்த நேரத்திலும் படையெடுப்பு தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்து வந்தது. மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷியா கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்காவும் எச்சரித்து.

ஆனால் அதை மீறியும் கடந்த மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீதான போரை ரஷியா தொடங்கியது. அதை தொடர்ந்து ரஷியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகளை அமெரிக்கா அணி திரட்டி வருகிறது.

இதன்காரணமாக அமெரிக்கா-ரஷியா இடையிலான மோதல் முற்றி வருகிறது. போரின் விளைவாக உருவான இந்த மோதல் ஒரு புறமிருக்க இருநாடுகளுக்கு இடையில் தூதரக ரீதியிலும் மோதல் வலுத்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பணியாற்றி வரும் ரஷிய தூதரக அதிகாரிகள் பலர் அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டி அவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டது.

தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த முடிவுவை மறுபரிசீலனை செய்யும்படி அமெரிக்காவை ரஷியா கேட்டுக்கொண்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த அமெரிக்க அரசு, குற்றச்சாட்டுக்கு உள்ளான ரஷிய தூதரக அதிகாரிகள் அனைவரும் மார்ச் 7-ந்தேதிக்குள் தங்களின் குடும்பத்தினரோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து ஐ.நா. தலைமையகத்தில் பணியாற்றி வந்த ரஷிய தூதரக அதிகாரிகள் 50 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதரகம் செய்தது.

அதன்படி நேற்று 50 ரஷிய தூதர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 2 பஸ்கள் மூலம் நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து ரஷிய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தனி விமானத்தில் அவர்கள் அனைவரும் ரஷியா தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட்டனர்.

உக்ரைன்-ரஷியா போருக்கு மத்தியில் ஒரே நாளில் ரஷிய தூதரக அதிகாரிகள் 50 பேர், குடும்பத்தினரோடு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com