

கஜினி,
ஆப்கானிஸ்தானில் கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக தலீபான் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு வசித்து வரும் குழந்தைகள், பெண்கள் என பொதுமக்கள் மீதும் மற்றும் அரசு படையினர் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
நீண்ட காலம் தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தீவிரவாதிகள் அதற்கு உடன்படவில்லை. அவர்கள் தங்களது தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்நாட்டின் வார்டாக் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளம் மீது, காரில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன் நேற்று அதனை வெடிக்க செய்துள்ளான். முதலில் நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு ஊடுருவிய பிற தீவிரவாதிகள், ராணுவ தளம் மற்றும் போலீஸ் பயிற்சி மையம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்த சம்பவத்திற்கு பதிலடியாக ஆப்கானிய படையினர் நடத்திய தாக்குதலில் 3 தலீபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று தலீபான் தீவிரவாத அமைப்பினர் அறிக்கையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், இந்த பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வடைந்து உள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 65 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன.
எனினும் பெயர் வெளியிட விருப்பம் தெரிவிக்காத மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, 70 பேர் கொல்லப்பட்டு இருக்க கூடும் என கூறியுள்ளார்.