உலகைச் சுற்றி...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல்முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.
உலகைச் சுற்றி...
Published on


* பியுனோஸ் அயர்ஸ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இருதரப்பு வர்த்தக போரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய கார்களுக்கான வரியை குறைப்பதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

* சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஜோர்டான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள சுவாய்டா நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் நடந்த மோதலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 270 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல்முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இருவரிடையேயான அடுத்த சந்திப்பு வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. இந்த சந்திப்புக்காக 3 இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக டிரம்ப் கூறி உள்ளார்.

*ஓபெக் என்னும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விலக உள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.

* அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி செனட் எம்.பி., என்ற சிறப்புக்குரியவர் கமலா ஹாரிஸ் (வயது 54). இவர் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவது குறித்து வரும் விடுமுறை காலத்தில் முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

* ஆப்கானிஸ்தானின் கஜினி மற்றும் பால்க் மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் இறங்கி உள்ளனர். கடந்த 2 நாட்களில் இரு மாகாணங்களிலும் 80 பயங்கரவாதிகள் பலியானதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவரான அபு அல் உமரயன் பலியானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com