

* மொசூல் பழைய நகரை ஐ.எஸ். பயங்கர வாதிகளிடம் இருந்து மீட்பதற்காக ஈராக் படைகள் தாக்குதல்களை தொடங்கி உள்ளன. இந்த தாக்குதலை ஈராக் படைகளும், பயங்கரவாத தடுப்பு படைகளும், மத்திய போலீஸ் படைகளும் கூட்டாக தொடுத்துள்ளன.
* ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் மாகாணத்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் காணாமல் போய் விட்டனர். கடந்த 16-ந் தேதி பாகிஸ்தானுக்கு சாலை மார்க்கமாக அவர்கள் பயணம் மேற்கொண்டபோது காணாமல் போய்விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
* அமெரிக்காவில் சீக்கிய மதத்துக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு மாறிய ஹர்பிரித் சிங் கல்சா என்பவர், மேரிலாந்தில் கேடன்ஸ்வில்லே என்ற இடத்தில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருந்தார். அவர் தனது மத வழக்கப்படி இடுப்பில் கத்தியை செருகி வைத்திருந்தார். இதைக்கண்ட அமெரிக்கர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் வந்து ஹர்பிரித் சிங் கல்சாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
* எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அரு-யுள்ள மாதி என்ற இடத்தில் சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 4 பேர் காயம் அடைந்தனர்.
* அமெரிக்க பாடகியும், நடிகையுமான பியான்சே (வயது 35), ஷான் ஜே கார்ட்டர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில், பியான்சே மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைகள் பிறந்தது எப்போது, ஆணா, பெண்ணா என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
* கிரீஸ் நாட்டில் லெஸ்போஸ் தீவுக்கு தெற்கே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 10.50 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால், தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்து வந்து வீதிகளில், திறந்தவெளி மைதானங்களில் தஞ்சம் அடைந்தனர். எனினும் இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.