துபாயில் உள்ள இந்து கோவிலில் மகா சிவராத்திரி பூஜையை காணொலி காட்சி மூலம் காண பக்தர்களுக்கு ஏற்பாடு; கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பர்துபாய் இந்து கோவிலில் மகா சிவராத்திரி பூஜையை பக்தர்கள் காணொலி காட்சி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பர்துபாயில் உள்ள இந்து கோவிலின் தோற்றம்
பர்துபாயில் உள்ள இந்து கோவிலின் தோற்றம்
Published on

இது குறித்து பர்துபாய் கோவில் நிர்வாக டிரஸ்டி ராஜு சரப் கூறியதாவது:-

பக்தர்களுக்கு தடை

துபாய் நகரின் முக்கிய பகுதியான பர்துபாய் பகுதியில் இந்து கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் மீண்டும் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் அரை மணி நேரம் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி வருகிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பர்.ஆனால் இந்த ஆண்டு, தற்போது இருந்து வரும் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கூட்ட நெரிசல் அதிகமாவதை தடுக்க மகா சிவராத்திரி பூஜையை நேரில் கண்டு தரிசனம் செய்ய வருகிற 11, 12-ந் தேதிகளில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

காணொலி காட்சி மூலம்...

பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி வழியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக காலை 5 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தே வழிபாடுகளை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு ஜெபல் அலி பகுதியில் புதிதாக பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்த கோவில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com