

வாஷிங்டன்,
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் உருவாக்கப்பட்ட 'அப்பல்லோ 11' விண்கலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதன்முதலில் மனிதர்களை நிலவில் தரை இறக்கியது. இதன் பிறகு கடைசியாக 'அப்பல்லோ 17' விண்கலம் மூலமாக 1972-ம் ஆண்டு நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
மனிதர்கள் நிலவில் காலடி எடுத்து வைத்து 53 ஆண்டுகள் ஆனநிலையில் ‘ஆர்டெமிஸ் 2’ என்ற திட்டத்தின் மூலமாக கடந்த 2-ந்தேதி, ஒரு கனடா நாட்டவர், ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இவர்கள் ஓரியன் விண்கலம் மூலமாக பூமியின் புவிவட்டப்பாதையை சுற்றி வந்து முக்கியமான சோதனைகள், உயிர்க்காக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நிலவை நோக்கிய தங்களுடைய பயணத்தை வெற்றிக்கரமாக முன்னெடுத்தநிலையில் நிலவின் சுற்று வட்டப்பாதையை நெருங்கினர். 1972-ம் ஆண்டுக்குப் பிறகு, மனிதர்கள் பயணிக்கும் விண்கலம் ஒன்று நிலவை இவ்வளவு நெருக்கமாக நெருங்குவது இதுவே முதல் முறை. ஓரியன் விண்கலத்தில் பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்தனர். பூமியில் இருந்து 3 லட்சத்து 73 ஆயிரத்து 367 கி.மீ. (2,32,000 மைல்கள்) தொலைவிலும், நிலவில் இருந்து 6 ஆயிரம் கி.மீ. (4 ஆயிரம் மைல்கள்) தொலைவில் 4 விண்வெளி வீரர்களும் ஓரியன் விண்கலம் மூலமாக சுற்றி வந்தனர்.
அப்போது நிலவின் பின்புறத்தை தமது கண்களால் வீரர்கள் கண்டனர். ரோபோக்கள், ரோவர்கள் மற்றும் செயற்கைக்கோளை தவிர்த்து மனிதர்களால் முதன்முதலில் நிலவின் பின்புறத்தை காண்பது முதல்முறையாகும். நிலவின் பின்புறம் விண்கலம் சென்றபோது, 40 நிமிடங்கள் பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த விண்கலம் நிலவுக்குப் பின்புறம் சென்றது. அந்த 40 நிமிடங்கள் பூமியுடன் அவர்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. அந்த குறிப்பிட்ட நேரம் அவர்கள் நிலை என்ன என்பது குறித்து பூமியில் உள்ள ஆய்வாளர்களால் கண்காணிக்க முடியவில்லை. அவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும்.. மீண்டும் சிக்னல் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது.
இதன்படி பூமியுடனான அதன் தகவல் தொடர்பு சுமார் 42 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. இந்திய அதிகாலை 4:13 மணிக்கு சிக்னல் இழக்கப்பட்டு, அதிகாலை 4:55 மணிக்கு மீண்டும் பெறப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில், அதிகாலை 4:32 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் மிக நெருக்கமாக இவர்கள் விண்கலம் சென்றது. அதன்பின், அதிகாலை 4:35 மணிக்குப் பூமியில் இருந்து இதுவரை இல்லாத அதிகபட்ச தொலைவாக 4,06,776 கி.மீ தூரத்தை எட்டியது. சுமார் 7 மணி நேரம் இதுபோல நிலவைச் சுற்றி வந்து முக்கியமான தகவல்களை அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.
அதைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் பூமி நோக்கிய தங்கள் பயணத்தை ஆரம்பிப்பார்கள். இந்த 10 நாள் பயணம் நிலவில் தரை இறங்குவதற்காக அல்ல.. மாறாக, விண்கலத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சோதிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இந்த 'ப்ரீ-ரிட்டர்ன்' பாதையைப் பயன்படுத்தி, நிலவின் ஈர்ப்பு விசையாலேயே விண்கலம் மீண்டும் பூமியை நோக்கி தள்ளப்படும்.
வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 11-ந் தேதி) பசிபிக் பெருங்கடலில் இந்த விண்கலம் வந்திறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் ஆர்டெமிஸ்-3 திட்டத்துக்கு இது ஒரு முன்னோட்டமாகும்.