நிலவை நெருங்கியது நாசா அனுப்பிய ஆர்டமிஸ் விண்கலம்

நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' விண்கலம், தனது பயணத்தின் முதல்பாதியை வெற்றிகரமாக கடந்துள்ளது.
Credit: NASA
Credit: NASA
Published on

நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-2 மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான, ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா துவங்கியது. கடந்த 2-ஆம் தேதி ஆர்டெமிஸ்-2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக நிலவைச் சுற்றி வருவார்கள். இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதைவிட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். மேலும் நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது. நிலவின் மறுபக்கம் சென்று ஆய்வு செய்ய விண்வெளி வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஏவப்பட்ட 2 நாள்கள், 5 மணி நேரம் மற்றும் 24 நிமிடங்களில் இந்த முக்கிய மைல்கல்லை விண்கலம் எட்டியது. தற்போது இந்த விண்கலம் பூமியை விட நிலவுக்கு மிக அருகாமையில் நிலை கொண்டுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விண்கலத்திலிருந்து பேசிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், 'இப்போது விண்கலத்தின் ஜன்னல் வழியாக நிலவைப் பார்க்க முடிகிறது; அது ஒரு அற்புதமான காட்சி'என்று கூறினார்.

பயணத்தின் அடுத்த கட்டமாக, இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, பூமியின் ஈர்ப்பைவிட நிலவின் ஈர்ப்பு விசை விண்கலத்தின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும். இந்த மைல்கல்லை எட்டினால், மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து மிக நீண்ட தூரம் பயணம் செய்த மனிதர்கள் என்ற சாதனையை இக்குழு படைக்கும். நிலவைச் சுற்றி வரத் திட்டமிட்டுள்ள ஆர்டெமிஸ் 2 குழு பயணத்தின் 6-ஆவது நாளில் நிலவுக்கு மிக அருகில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். மொத்தம் 10 நாட்கள் இந்த விண்வெளி பயணம் திட்டமிட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com