

மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் ஆசியன் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தகத்தினை ஊக்குவித்தலுக்கான வழிகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் போன்ற பிற விவகாரங்களுடன் இரு நாடுகளின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய விசயங்கள் இடம்பெற்றன.
டிரம்ப் கடந்த சனிக்கிழமை வியட்நாமில் நடந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த தலைமை செயல் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்பொழுது, 100 கோடி மக்கள் தொகையுடன் நல்லிணக்க ஜனநாயகம் கொண்ட மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடு என இந்தியாவை புகழ்ந்து கூறினார்.
மோடி கூறியதாவது:-
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவுகள் வளர்ந்து வருகின்றன, எமது உறவுகள் அப்பால் சென்று கொண்டிருக்கின்றன, ஆசிய மற்றும் மனிதகுலத்தின் எதிர்கால நலன்களுக்காக நாங்கள் வேலை செய்கின்றோம். எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இரவு, பகலாக இந்திய அரசு உழைத்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவை மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தியா ஓர் உலகளாவிய உற்பத்தி மையமாக உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் வங்கியியல் சேவைகளை பெறவில்லை. ஜன் தண் யோஜனா ஒரு மாதத்தில் கோடி கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. இவ்வாறு அவர் கூறினார்.