

ஆப்கானிஸ்தானில் கஜனி நகரில் அந்நாட்டு படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
கஜினி மாகாணத்தின் தலைநகரான கஜினியை பிடிப்பதற்கு தலீபான் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி 9-ம் தேதி நள்ளிரவுக்கு பின்னர் களம் இறங்கினர். போலீஸ் சோதனைசாவடிகளை தீயிட்டு கொளுத்தினர். வீடுகள் மீது குண்டுகளை வீசினர். கடைகள் மீதும் தாக்குதல் தொடுத்தனர். எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச்சூடு சத்தமும், குண்டுகள் வெடிக்கும் சத்தமும் தான் கேட்டன. பல இடங்களில் புகை மண்டலங்கள் உருவாகின. தலீபான்களுக்கும் போலீஸ் படைகளுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சண்டைகளும் தொடங்கியது.
தலீபான்களை ஆப்கானிஸ்தான் படைகள் ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தலீபான்கள் பலர் பலியானதாக கூறப்பட்டது. அவர்களில் பலரது உடல்கள் தெருக்களில் கிடந்ததாகவும் செய்திகள் வெளியாகியது. தலீபான்களை குறிவைத்து வான்வழி தாக்குதலும் நடத்தப்பட்டது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். சண்டையில் கஜினி நகரின் சில பகுதிகளை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் படைகள் பதிலடி தாக்குதலை கொடுத்து வருகிறது.
கடந்த 4 நாட்களாக பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. நிலை கட்டுக்குள் உள்ளது என பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், வான்படைகள் தீவிர தாக்குதலை மேற்கொண்டுதான் வருகிறது. பயங்கரவாதிகளும் எதிர்தாக்குதலை முன்னெடுத்து வருகிறார்கள். இருதரப்பு இடையேயும் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பு இடையே நடைபெற்ற மோதல்களில் பாதுகாப்பு படையினர் 100 பேர் பலியாகியுள்ளனர் எனவும் பொதுமக்களில் 20க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.