

காபூல்,
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. அரசுக்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கான முயற்சி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடந்தது. இதற்காக பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். தேர்தலை முன்னிட்டு 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
எனினும், தேர்தல் நடந்த வாக்கு சாவடி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இன்று தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், காபூல் நகரில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான்.
இந்த சம்பவத்தில் பொதுமக்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் போலீசார் என 13 பேர் பலியாகினர். இதேபோன்று பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் 130 பேர் காயமடைந்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. பொதுமக்கள் தங்களது உயிரை காக்க தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தலீபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.