ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தலீபான்கள் தாக்குதல்; 14 போலீஸ் அதிகாரிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தலீபான்கள் தாக்குதலில் ஈடுபட்டதில் 14 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தலீபான்கள் தாக்குதல்; 14 போலீஸ் அதிகாரிகள் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிற தலீபான் பயங்கரவாதிகளுக்கு அந்த நாட்டு அரசு நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனாலும் அதை ஏற்காமல், தொடர்ந்து அங்கு அவர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு கிழக்கு கஜினி மாகாணத்தில் அவர்கள் 2 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 14 போலீஸ் அதிகாரிகள் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி கஜினி மாகாண கவுன்சில் உறுப்பினர் ஹசன் ரேசா யூசுபி கூறும்போது, திஹ் யாக் மாவட்டத்தில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். ஜகாட்டு மாவட்டத்தில் அவர்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் 7 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர் என்று குறிப்பிட்டார்.

லதிபா அக்பரி என்ற மற்றொரு மாகாண கவுன்சில் உறுப்பினர், இதை உறுதி செய்தார்.

தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித், இந்த தாக்குதல்களை தலீபான் அமைப்பினர்தான் செய்தனர் என ஒப்புக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், ஜகாட்டு மாவட்ட தலைமையகமும், திஹ்யாக் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைசாவடிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com