

கொழும்பு
இலங்கையின் 71-வது சுதந்திர தினவிழா இன்று அந்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திரத்திற்கு முன்னதாக காணப்பட்ட வெளிநாட்டு மேலாதிக்கம் இன்னமும் தொடர்கிறது. அது வேறு வடிவங்களில் நீடிக்கின்றது.
நாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அரசியல்வாதிகள் கூறிய போதிலும் இதுவரையில் தீர்வு எட்டப்படவில்லை.
தேசிய அரசு ஒன்றை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாட்டுக்கு தேசிய அரசாங்கம் தற்பொழுது தேவையில்லை. அதனை நிராகரிப்போம்.
2015 ஆம் ஆண்டில் உருவாக்கிய தேசிய அரசாங்கம் எதைச் செய்யக் கூடாதோ அவற்றை மட்டுமே செய்தது. எந்தவித நல்ல காரியங்களையும் செய்யவில்லை. அத்துடன் மாகாணசபைத் தேர்தல் நடத்தபடாததற்கு எந்தவொரு அரசு சார்பற்ற நிறுவனமும் கேள்வி எழுப்பவில்லை. ஊழல், மோசடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.