குவைத் கொடியுடனான கப்பல் மீது தாக்குதல்; 5 இந்தியர்கள் மீட்பு

பாரசீக வளைகுடாவில் இந்திய கொடியுடனான 6 கப்பல்கள் மற்றும் வெளிநாட்டு கொடியுடனான 6 கப்பல்கள் என மொத்தம் 12 கப்பல்கள் உள்ளன.

குவைத் கொடியுடனான கப்பல் மீது தாக்குதல்; 5 இந்தியர்கள் மீட்பு
Published on: 

மஸ்கட்

குவைத் கொடியுடனான கப்பல் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கிய 5 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் வான்வழியே தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான் கைப்பற்றியது.

இதனால், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலைவாசியும் உயர்ந்து பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. ஜலசந்தி பகுதியில் செல்லும் கப்பல்கள் கடுமையாக தாக்கப்படும் நிலையும் உள்ளது. இந்த நிலையில், ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், குவைத் கொடியுடனான எம்.டி. கஜீமா 3 என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது.

ஏவுகணை தாக்குதல்

அப்போது அந்த கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்று நடந்தது. கச்சா எண்ணெய்யுடன் சென்ற அந்த கப்பல், டோகோவில் உள்ள லோமி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதலால், அது கடுமையாக பாதிக்கப்பட்டது என தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஓமன் அரசு தரப்பில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கப்பலில் சிக்கிய 5 இந்தியர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ஓமன் அரசின் இந்த ஆதரவு மற்றும் உதவிக்காக ஓமன் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று இந்திய தூதரகம் பதிவிட்டு உள்ளது.

12 கப்பல்கள்

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, பாரசீக வளைகுடாவில் இந்திய கொடியுடனான 6 கப்பல்கள் மற்றும் வெளிநாட்டு கொடியுடனான 6 கப்பல்கள் என மொத்தம் 12 கப்பல்கள் உள்ளன. அவை இந்தியாவுக்கு சரக்குகளை கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

இந்த கப்பல்களில் 163 இந்திய பணியாளர்கள் உள்ளனர் என தெரிவித்து இருந்தது. இதுதவிர, பாரசீக வளைகுடாவில் இயங்கி வரும் பல்வேறு வர்த்தக கப்பல்களில் 4,500-க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com