

லாகூர்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இம்ரான் கானின் கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் தங்களது ஆதரவை பி.எம்.எல்-கியூ கட்சிக்கு வழங்கியுள்ளனர். இந்த சூழலில், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஸ்தார் தனது ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கினார். அவரும் அதனை ஏற்று கொண்டார்.
ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 2ந்தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்பட இருந்தது. பின்னர் காரணமின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (வயது 70) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர், புதிய அமைச்சரவையை அமைக்கும் பணிகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை கூட்டப்பட்டது. இதற்காக துணை சபாநாயகர் தோஸ்த் முகமது மஜாரி அவைக்கு வருகை தந்துள்ளார்.
அவர் மீது, பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்கள் லோட்டாக்களை (பாத்திரம்) வீசி எறிந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். கட்சியில் உள்ள உறுப்பினர்கள் பிரிந்து எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவுதர முயன்ற பி.டி.ஐ. உறுப்பினர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
துணை சபாநாயகர் மஜாரி மீதும் லோட்டாக்கள் வீசப்பட்டன. அவர் மீது பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அவை பாதுகாவலர்கள் மஜாரியை சூழ்ந்து கொண்டு அவருக்கு பாதுகாப்பு வழங்கினர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டு உள்ளது.