இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஈரான் போர் கப்பல் மீது தாக்குதல்; 148 பேர் பலி?

போர் கப்பலில் இருந்து 32 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஈரான் போர் கப்பல் மீது தாக்குதல்; 148 பேர் பலி?
Published on

கொழும்பு,

இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற கூட்டுப்பயிற்சி வங்காளவிரிகுடா கடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பலும் பங்கேற்றது.

இந்த கூட்டுப்பயிற்சிக்குப்பின் விசாகப்பட்டினத்தில் இருந்து ஈரான் போர் கப்பல் கடந்த சில நாட்களுக்குமுன் புறப்பட்டது. போர் கப்பலில் ராணுவ வீரர்கள் உள்பட 180 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், ஈரான் போர் கப்பல் இன்று அதிகாலை இலங்கையின் கலி நகர் அருகே இந்திய பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஈரான் போர் கப்பலை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் போர் கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்தவர்கள் உதவிகேட்டு அவசர அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து அறிந்த இலங்கை கடற்படையினர், விமானப்படையினர் போர் கப்பல் மூழ்கிக்கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

போர் கப்பல் மூழ்கிய நிலையில் இதில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அவர்களில் 32 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு கலி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், கப்பலில் இருந்த எஞ்சிய 148 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை. இதனால் போர் கப்பல் மூழ்கியதில் அதில் இருந்த எஞ்சிய 148 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, போர் கப்பல் மூழ்கிய பகுதியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய பெருங்கடலில் சென்றுகொண்டிருந்த ஈரான் போர் கப்பலை தாக்கியது யார்? போர் கப்பல் மூழ்கியது எப்படி? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, நீர்மூழ்கி போர் கப்பல் மூலம் ஈரான் போர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய நீர்மூழ்கி போர் கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது? அமெரிக்காவை சேர்ந்ததா? உள்ளிட்ட எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்கனவே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய பெருங்கடலில் ஈரான் போர் கப்பல் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com