காபூல் விமான நிலைய தாக்குதல்; “மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சூளுரை

காபூல் விமான நிலைய தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தாக்குதலுக்கு காரணமானவர்களை வேட்டையாடும் எனவும் சூளுரைத்துள்ளார்.
காபூல் விமான நிலைய தாக்குதல்; “மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சூளுரை
Published on

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 103 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அமெரிக்க வீரர்கள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் அதிகபட்சமாக உயிரிழந்தது இதுவே முதல் முறை.

அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேற இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்

இந்த நிலையில் காபூல் விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்டவர்களை மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்; அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.

காபூல் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியபோது ஜோ பைடன் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். அதற்குப் பதிலாக எங்கள் படைகளுடன் அவர்களை வேட்டையாடுவோம்.

அரைக்கம்பத்தில் அமெரிக்க தேசியக்கொடி

இந்த தாக்குதலில்உயிரிழந்த அமெரிக்க வீரர்களை நாங்கள் நினைவுகூர்கிறோம். அவர்கள் நிச்சயமாக போற்றுதலுக்குரிய நாயகர்கள். அவர்களை கவுரவிக்கும் வகையில் வரும் 30-ந் தேதி வரை அமெரிக்க தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே திட்டமிட்டபடி 31-ந் தேதி வரை மீட்புப் பணிகள் நடைபெறும். பயங்கரவாதிகள் அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடங்கிவிட மாட்டோம். எங்களின் மீட்புப் பணி தொடரும்.

இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com