

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே பரா மாகாணத்தில் பாலாபிளோக் மாவட்டத்தில் ராணுவ நிலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. தலீபான் பயங்கரவாதிகள் இதனை நோக்கி சுரங்கம் தோண்டி சென்று அதனை வெடிக்க செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. இதுபற்றி மாகாண ஆளுனர் தாஜ் முகமது ஜாகித் கூறும்பொழுது, பாலாபிளோக் மாவட்டத்தின் சிவான் பகுதியில் ராணுவ சோதனை சாவடி ஒன்றை பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். பலரை காணவில்லை என கூறியுள்ளார்.
இதன்பின்னர் தலீபான் பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி 10 பேரை கொன்று விட்டும், காயமடைய செய்து விட்டும் தப்பியோடி விட்டனர் என்றும் கூறியுள்ளார்.
எனினும், பரா மாகாண கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர் மசூத் பக்தவார் கூறும்பொழுது, ராணுவ தளத்தில் இருந்த அனைத்து 30 வீரர்களும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டு விட்டனர் என கூறியுள்ளார். போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.