

துபாய்,
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 2 வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு வலுவான பதிலடி கொடுத்து வரும் ஈரான், அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ள அரபு நாடுகளிலும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.மேலும் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியிருக்கும் ஈரான், அந்த வழியாக செல்லும் சர்வதேச நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் உள்ளிட்ட வணிகக் கப்பல்களையும் தாக்கி வருகிறது. இதனால் பல நாடுகளில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தை சீராக்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அந்த ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புமாறு தனது நட்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படவும், அங்கு பாதுகாப்பான போக்குவரத்து நிலவுவதற்கும் சீனா, பிரான்ஸ், தென்கொரியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்பும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இந்த நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்பினால் வளைகுடா பிராந்தியத்தை தாண்டியும் போர் விரிவடையும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், துபாய் விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்து வருகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாய்க்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.