

பலூசிஸ்தான்,
பாகிஸ்தானிய ராணுவம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், பலூசிஸ்தானில் ரோந்து சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாகிஸ்தானிய படை வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானிய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. துப்பாக்கி சூடும் நடத்தியது.
இதில், பயங்கரவாதிகள் தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்டது. இதன்பின், பயங்கரவாதிகள் தப்பி செல்ல கூடிய வழிகளை தடுத்து நிறுத்தி படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிய உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் அகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். இதேபோன்று எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பும் வருத்தம் தெரிவித்து உள்ளார். உடனடியாக சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.