

கான்பெரா,
தீராத நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட 12 வயது சிறுமி ஒருவரின் வாழ்நாள் கனவை, ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனமான காண்டாஸ் நனவாக்கியுள்ளது. அந்த சிறுமி ஒரு நாள் விமானப் பணிப்பெண்ணாக மாறி, நிஜமான பயணிகள் விமானத்தில் பணியாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி சிறுமி த்ரிஷா செவ்வனே(வயது 12). இவருக்கு 4 வயது இருக்கும்போதே கடுமையான சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. தனது சிறுவயது முழுவதையும் ஆஸ்பத்திரியிலேயே கழித்த த்ரிஷாவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு அவரது தாயார் மிஷெல் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.
வெற்றிகரமான இந்த மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு த்ரிஷா குணமடைந்தார். மருத்துவப் போராட்டங்களுக்கு இடையே, விமானங்களில் பயணிக்கும்போது பணிப்பெண்கள் செய்யும் சேவைகளால் ஈர்க்கப்பட்ட த்ரிஷாவுக்கு, தானும் ஒரு நாள் விமான பணிப்பெண் ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் 'மேக்-ஏ-விஷ்' அமைப்பு மற்றும் காண்டாஸ் விமான நிறுவனம் இணைந்து த்ரிஷாவின் இந்தக் கனவை நிஜமாக்கின. இதற்காக காண்டாஸ் நிறுவனத்தின் சிட்னி பயிற்சி மையத்தில் த்ரிஷாவுக்கு முறையான அவசரக்கால பாதுகாப்பு மற்றும் சேவைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், அவருக்காக பிரத்தியேகமாக தைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பணிப்பெண் சீருடையும், சிறப்பு முத்திரையும் வழங்கப்பட்டது.
பயிற்சிக்குப் பிறகு, கடந்த மாதம் 15-ந்தேதி சிட்னியிலிருந்து அடிலெய்டு சென்ற வணிக ரீதியான பயணிகள் விமானத்தில் (கியூஎப்735) த்ரிஷா பணிப்பெண்ணாக களமிறங்கினார். விமானத்தில் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு அறிவிப்புகளை வழங்கியது, பயணிகளை இன்முகத்துடன் வரவேற்றது, மற்றும் தள்ளுவண்டி மூலம் பயணிகளுக்கு சிற்றுண்டிகளைப் பரிமாறியது என நிஜமான பணிப்பெண்ணைப் போலவே அனைத்து கடமைகளையும் த்ரிஷா செவ்வனே செய்தார்.
முன்னணி விமானப் பணிப்பெண் ஆஷ்லி பிஷர் த்ரிஷாவுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார். த்ரிஷாவின் இந்த நெகிழ்ச்சியான வீடியோவை காண்டாஸ் நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், த்ரிஷாவின் தன்னம்பிக்கையையும், விமான நிறுவனத்தின் இந்த நற்செயலையும் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.